சேலத்தில், பண இரட்டிப்பு ஆசை காட்டி 17 ஆயிரம் பேரிடமிருந்து 1200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளைத் திரட்டிக்கொண்டு, கம்பி நீட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். 

சேலம் சொர்ணபுரியில் "ரீகிரியேட் ஃபியூச்சர் இண்டியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் டைரக்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. கம்பெனி பதிவு சட்டத்தின்கீழ் 11.9.2023-ஆம் தேதி பதிவுசெய்துள்ள இந்நிறுவனம், வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்வதாக தகவலளித்துள்ளது. ஹோம் அப்ளை யன்சஸ் விற்பனை என்று சொல்லிக்கொண்டாலும், இந்நிறுவனம் செய்ததோ பணம் இரட்டிப்பு எனும் பக்காவான தில்லுமுல்லு ஆட்டம்தான். 

இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜி.ராஜேஷ், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த எம்.ராஜேஷ், இவருடைய மனைவி சத்தியபாமா ஆகியோர் முதலீட்டாளர்களி டம் பல கோடி ரூபாய் டெபாசிட் பெற்றுக் கொண்டு, உறுதியளித் தபடி இருமடங்காக திருப்பித்தராமல் ஏமாற்றிவந்துள்ள னர். 

Advertisment

money1

கடந்த பிப்ரவரி மாதம் முதலீட்டாளர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுக்க, இந்த விவகாரம் காவல்துறைக்கு கசிந்துள்ளது. சேலம் பள்ளப்பட்டி போலீசார் கடந்த பிப். 22-ஆம் தேதி, நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊழியர் ஹரிபாஸ்கர் ஆகியோரைக் கைதுசெய்தனர். அடுத்த 20 நாட்களில் இயக்குநர்கள் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தபிறகு, மீண்டும் கடந்த மார்ச் மாதம் ராசிபுரத்தில் முதலீட்டாளர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். 

Advertisment

மோசடிப் பேர்வழிகள் ஜாமீன் பெற்றுவிட்டு, ஜாலியாக வெளியே திரிவதைக் கண்டு கொதித் தெழுந்த முதலீட்டாளர்கள் 70-க்கும் மேற்பட் டோர் கடந்த ஜூன் 30-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட, அவர்களைக் கொத்தாக கைதுசெய்தது போலீஸ். அதன்பிறகுதான் ஆர்.எப்.ஐ. நிறுவனத்தின் கோல்மால்கள் பெரிய அளவில் வெளிவரத் தொடங்கின. 

இந்த மோசடி தொடர்பாக, "நக்கீரன்' நடத்திய கள விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வீட்டிலிருந்தபடியே மாதம் 38 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பகுதி நேர வேலை என்ற பெயரில் கவர்ச்சிகரமான அறிவிப்பின் மூலமே முதலீட்டாளர்களை தங்கள் நிறுவனத்திற்குள் அழைத்துள்ளனர். இதை நம்பி வந்தவர்களிடம், இந்நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற 3,300    ரூபாய் செலுத்தி, "கேட் பாஸ்' பெறவேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு பெறப்படும் தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு உபயோகப் பொருள்களைக் கொடுத்துள்ளனர். அவை யனைத்தும் தரமற்றவை என்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

இவ்வாறு, கேட் பாஸ் பெற்ற முதலீட்டாளர்களை அழைத்து கூட்டம்போடும் இயக்குநர் ஜி.ராஜேஷ், மணிக் கணக்கில் பேசிப்பேசியே மண்டையைக் கழுவி காயப்போட்டு விடுவாராம். அங்குதான் பண இரட்டிப்பு மோசடித் திட்டத்தையே அரங்கேற்றுவதாகச் சொல் கிறார்கள். 

முதலீட்டுத் தொகையை வெறும் இரண்டரை மாதத்தில் இரட்டிப்பு மடங்காகத் திருப்பித் தருவதாக கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார். முதலீட்டுத் தொகை 11 மாதத்தில் இரண்டு மடங்காக முதிர்வுபெறும் திட்டமும் உள்ளது. அவர் கடந்த பிப்ரவரியில் கைதுசெய்யப்படுவதற்கு சில நாள்கள் முன்பு, 36,000 ரூபாய் மடங்கில் முதலீடுசெய்தால் ஒவ்வொரு 36,000க்கும் மாதம் 5000 ரூபாய் வீதம் வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அசரடித் துள்ளார். 10,000 ரூபாய் செலுத்தி ஒரு ஐ.டி., பெற்றுக்கொண்டால் மாதம் 5000 ரூபாய் வீதம் 4 மாதங்களுக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதியளித்துள்ளார். 

இதுபோன்ற கவர்ச்சி அறிவிப்புகளை நம்பிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பாவி முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் டெபாசிட்டு களைக் கொட்டியுள்ளனர். இந்த கும்பல் பிடிபடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இரண்டேநாளில் 100 கோடி ரூபாய் டெபாசிட் திரட்டியுள்ளனர். 

இந்த நிறுவனத்தின் டார்கெட் பெரும்பாலும் கீழ் மத்தியதர வர்க்க மக்கள்தான். குறிப்பாக, பெண்களை இலக்காக வைத்தே காய்களை நகர்த்திவந்துள்ளனர். முதலீட்டாளர்களிடம் நைச்சியமாக பேசி பணத்தைக் கறக்கும் வேலைக்காகவே ஜான்சி ராணி, இர்ஷாத், இளமதி, சரவணன், ஹூசேன், விஜய், ஸ்ரீகாந்த், சாந்தி, கிருத்திகா ஆகியோரை மெயின் லீடர்களாக நியமித்துள்ளார் ஜி.ராஜேஷ் என்கிற கங்காதரன் ராஜேஷ். இவர்களுக்குக் கீழ் 200-க்கும் மேற்பட்ட சப் லீடர்களும் உண்டு. 

"இயக்குநர் ஜி.ராஜேஷ், எல்லா முதலீட் டாளர்களையும் தனது குடும்பம்போல் பாவித்துப் பேசுவார். அவர் வாராகி அம்மனின் தீவிர பக்தர். ஏழை மக்கள் எல்லோரையும் பணக்காரர்களாக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வாராகி அம்மன் தன்னை அனுப்பிவைத்திருப்பதாகக் கூறுவார். 

money2

ஆரம்பத்தில் எங்களுடைய முதலீட்டுத் தொகைக்கு உறுதியளித்தபடி இரட்டிப்பு மடங்கு தொகையை திருப்பிக் கொடுத்தார். இதையெல் லாம் பார்த்து நாங்களும் ஜி.ராஜேஷை மனப்பூர்வமாக நம்பினோம். எங்களுக்கு இரட்டிப்பாக பணம் திரும்பக் கிடைத்ததால் அதையே மீண்டும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தோம். மற்ற ஆட்களை அறிமுகப்படுத்தி வைத்து, அவர்களையும் டெபாசிட் செய்யவைத் தோம். எங்கள் மூலம் பணத்தைப் போட்டவர்கள் எங்களிடம் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள்'' என்கிறார்கள் முதலீட்டாளர்கள். காவல்துறை தரப்பிலோ, சேலத்தில் இதுவரை நடந்த மோசடிச் சம்பவங்களில் இதுதான் மாபெரும் மோசடி என்கிறார்கள். 

ஆர்.எப்.ஐ. நிறு வனம் தொடங்கப் படுவதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் "ட்ரூ ஃபியூச்சர் இண்டியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இதே தில்லுமுல்லு வேலைகளை அரங் கேற்றிவந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் இயக்குநர் களாக எம்.ராஜேஷ், மாசிவேல் தனவள்ளி ஆகியோர் இருந்துள்ள னர். இந்த எம்.ராஜேஷ் என்கிற மாசிவேல் ராஜேஷ்தான் தனக்கு தொழில் கற்றுக்கொடுத்த குரு என்று பலரிடமும் கூறியுள்ளார் ஜி.ராஜேஷ். 

இவர்கள் ஏற்கனவே திண்டுக்கல், சென்னை, திருச்சியிலும் இதேபோல பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அங்கெல்லாம் சிக்காத இவர்கள், சேலத்தில் வகையாக சிக்கிக் கொண்டது தெரிய வந் துள்ளது.

முதலீட்டுப் பணம் திரும்பக் கிடைக்காத விரக்தியில் 4 பேர் மாரடைப்பிலும், ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டதாக முதலீட் டாளர்கள் கூறுகின்றனர். 

இந்நிறுவனத்திற்கு எதிராக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு 500-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிய, மோசடிக் கும்பல் மீது போலீசாரின் பிடி இறுகத்தொடங்கியது. இதையடுத்து ஜி.ராஜேஷ், எம்.ராஜேஷ், மெயின் லீடர்கள் ஜான்சி ராணி, இஷ்ராத், சரவணன் உள் ளிட்ட அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களிடம் விளக்கம்பெற பலமுறை அவர்களின் செல்போன் எண்களுக்கு அழைத்தபோது, அனைத்துமே ஸ்விட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தன.  இதற்கிடையே, இந்த மோசடி குறித்த வழக்கு சேலம் பள்ளப்பட்டி போலீசாரிடமிருந்து ஜூலை 1-ஆம் தேதி, சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள் ளது. இதுவரை 300 பேரிடம் புகார் பெறப்பட்டுள்ளது. 

முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட் தொகை, அவர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டிப்புத் தொகை, லீடர்கள் கமிஷன் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரொக்கமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணப்பரிவர்த்தனைக்காக எந்த ரசீதும் வழங்கப்படவில்லை. மோசடி செய்யும் உள்நோக்கத்துடனேயே நிறுவன இயக்குநர்கள் இதுபோல திட்டமிட்டுச் செயல்பட்டதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை, சாதாரண ஒரு பேரேட்டில் கைப்பட எழுதிவைத்துள்ளனர். இது மட்டும்தான் ஒரே ஆதாரம். 

சின்னச் சின்ன திருட்டு வழக்குகளில் கடுமை காட்டும் தமிழக காவல்துறையினர், ராஜேஷ் போன்ற ஒயிட்காலர் மோசடிக் கும்பலை லேசில் விட்டு விடுகிறார்கள் என்ற அதிருப்தி குரலும் பலமாக ஒலிக்கிறது.